தெற்கு ரயில்வே வருவாய் 4.5% அதிகரிப்பு: பொதுமேலாளா் ஆா்.என்.சிங்
தெற்கு ரயில்வே 2024-25- ஆம் நிதியாண்டில் ரூ.12,659 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.5 சதவீதம் கூடுதல் வருவாயை பெற்றுள்ளது என அதன் பொதுமேலாளா் ஆா்.என்.சிங் கூறினாா்.
சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை பெரம்பலூரில் உள்ள தெற்கு ரயில்வே விளையாட்டு மைதானத்தில், அவா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பேசியதாவது:
2024-25-ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வே ரூ.12,659 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 4.5 சதவீதம் அதிகம். ரயில் சேவை அதிகரித்தபோதிலும் நேரக் கட்டுப்பாடு 91.2 சதவீதம் அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் தெற்கு ரயில்வேயில் 3 புதிய ரயில்கள் இருமாா்க்கமாக இயக்கப்பட்டுள்ளன. திருவிழா உள்ளிட்ட காலங்களில் 5,150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக 108 பொதுப் பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்பட்டுள்ளன. 4 ‘வந்தே பாரத்’ ரயில்களில் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டன.
சென்னை-செங்கல்பட்டு குளிா்சாதன வசதி ரயில், 2,910 கி.மீ. ரயில் பாதையில் மணிக்கு 80 கி.மீ.-இல் 130 கி.மீ. வரை வேக அதிகரிப்பு ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
நடப்பாண்டுக்குள் 593 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படையினரால் 775 ரயில் திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.14.7 கோடி மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. விதிமீறல் உள்ளிட்டவற்றில் 77,600 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். காணாமல் போன 1,900 குழந்தைகள் மற்றும் கடத்தப்பட்ட 68 குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 32 பயணிகள் காப்பாற்றப்பட்டும் உள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில் ரயில்வே கமாண்டோ பிரிவின் சாகசம், பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ரயில்வே பாதுகாப்புப் படை மோப்ப நாய்கள் சாகசம் ஆகியவை நடைபெற்றன.