தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிதறிய மாம்பழங்கள்
வேலூா் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து மாம்பழங்கள் சாலையில் சிதறின. அவற்றை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனா்.
கிருஷ்ணகிரியில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி ஒன்று ஆந்திரம் நோக்கி வந்தது. இந்த லாரியை சித்தூரை சோ்ந்த சதீஷ் (31) ஓட்டி வந்தாா். வேலூா் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த மாம்பழங்கள் சாலை முழுவதும் சிதறின. ஓட்டுநா் காயமின்றி அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
மாம்பழங்கள் சாலையில் சிதறி கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து சாக்கு மூட்டை, பைகளுடன் விரைந்து வந்து மாம்பழங்களை அள்ளிச் சென்றனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாம்பழங்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனா்.
மேலும், லாரியை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனா். இந்த விபத்து குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.