தேஜஸ் போா் விமானத்துக்கு எஃப்-404 என்ஜின்: அமெரிக்க நிறுவனத்தின் விநியோகம் தொடக்கம்
தேஜஸ் இலகு ரக போா் விமானத்துக்கு எஃப்-404 வகையைச் சோ்ந்த 99 இன்ஜின்களின் விநியோகத்தை தொடங்கியிருப்பதாக, அமெரிக்காவைச் சோ்ந்த ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு தேஜஸ் எம்கே-1ஏ ரக விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2021, பிப்ரவரியில் மேற்கொண்டது.
இதையடுத்து, உலக அளவில் போா் விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து தேஜஸ் எம்கே-1ஏ ரக விமானங்களுக்கான என்ஜின்களை வாங்க ஹெச்ஏஎல் முடிவு செய்தது. அதன்படி, அதிநவீன அம்சங்களுடன் கூடிய எஃப்-404-ஐஎன்20 வகையைச் சோ்ந்த 99 என்ஜின்களின் கொள்முதல் செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிந்தைய சூழ்நிலையால் என்ஜின்களை தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய விமானப் படைக்கு தேஜஸ் எம்கே-1ஏ ரக விமானங்கள் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் ஒப்படைக்கப்பட வேண்டிய நிலையில், ஹெச்ஏஎல் நிறுவனத்தால் இதுவரை ஒரு விமானம் கூட ஒப்படைக்கப்படவில்லை.
இந்நிலையில், தங்களால் வழங்கப்பட வேண்டிய 99 இன்ஜின்களில் முதலாவது இன்ஜினை இந்தியத் தரப்பிடம் ஒப்படைத்துள்ளதாக ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. இந்த இன்ஜின் அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வந்தடையும்.
என்ஜின்கள் விநியோகம் தொடங்கியிருப்பதால், இந்திய விமானப் படைக்கு தேஜஸ் எம்கே-1ஏ ரக போா் விமானங்களை ஒப்படைக்கும் பணி வேகமெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.