தொடர் பாலின துன்புறுத்தல்; தாலிபன் தலைவர்களுக்கு கைது வாரண்ட்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாலிபன்கள் துன்புறுத்துவதை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), தாலிபன்களின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதியான அப்துல் ஹக்கீம் ஹக்கானிக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 2021 முதல், சுமார் நான்கு ஆண்டுகளாக தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகின்றனர். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பல கொடுமையான நிபந்தனைகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் விளைவாக, சிறுமிகள் மற்றும் பெண்கள் தொடக்கநிலை கல்விக்கு மேலான கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது மற்றும் பெண்கள் வேலைக்கு செல்ல தடை அமல்படுத்தப்பட்டது. பூங்கா போன்ற பிற பொது இடங்களுக்குள் நுழைவதற்கான அனுமதியும் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பெண்களுக்கான அடிப்படை சுதந்திரமே அங்கு பெரும் கேள்விக்குறியாய் போனது.
தாலிபன்களின் பாலின துன்புறுத்தல் செயல்பாடுகளை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), தாலிபன்களின் ஆன்மிக தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதியான அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 'தாலிபன்கள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதித்துள்ளனர். ஆனால், குறிப்பாக பெண் பாலினத்தை குறிவைத்து அவர்களது அடிப்படையான உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பறித்துள்ளனர்" எனக் கூறியிருக்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து பேசிய தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "நாங்கள் எந்த சர்வதேச நீதிமன்றத்தையும் அங்கீகரிக்கவில்லை என்பதால் எந்த சர்வதேச நீதிமன்றத்துக்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை" எனக் கூறினார். தவிர, இந்த கைது வாரண்ட் இஸ்லாம் மதத்திற்கு எதிரான விரோதப்போக்கின் எடுத்துக்காட்டு என கூறி தாலிபன்கள் சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலின அடிப்படையிலான தாலிபன்களது துன்புறுத்தலை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து நேரடியாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...