மராத்தி விவகாரம்: `என்னிடம் கேட்காமல் பேசக்கூடாது’ - நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே வாய்ப்பூட்டு
மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். மராத்தி பேசாத கடைக்காரர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பானது.
கடைக்காரர்கள் தாக்கப்பட்டதால் கடைக்காரர்கள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை தாக்க ஆரம்பித்தனர். வியாபாரிகள் நடத்திய பந்த்திற்கு எதிராக நவநிர்மாண் சேனாவினரும் மும்பை மீராபயந்தரில் மாபெரும் பேரணி நடத்தினர். இது நவநிர்மாண் சேனாவிற்கு எதிர்மறையாக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நவநிர்மாண் சேனா மாநில துணைத்தலைவர் ரேஷ்மா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க முடியாமல் திணறினார். மராத்திக்கு மரியாதை கொடுக்காதவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்வோம் என்று அவர் மிரட்டினார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதில் தொண்டர்கள் யாரும் மீடியாவில் பேசவோ அல்லது சமூக வலைத்தள பக்கத்தில் தகவல்களை பகிரவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களும் தன்னிடம் அனுமதி வாங்காமல் மீடியாவிற்கு பேட்டி கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்தாக்கரே தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கட்சியில் இருந்து யாரும் மீடியா, செய்தி சேனல்கள், சோசியல் மீடியாவில் பேசக்கூடாது. உங்களது பிரதிபலிப்புகளை சமூக வலைத்தளத்திலும் பகிரவேண்டாம். கட்சி செய்தி தொடர்பாளர்கள் என்னிடம் அனுமதி பெற்று மீடியாவிற்கு பேட்டி கொடுக்கவேண்டும். செய்தி தொடர்பாளர்கள் தங்களது உணர்வுகளை சமூக வலைத்தள பக்கத்தில் பகிரக்கூடாது''என்று குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு மராத்திக்காக ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் ஒன்றாக இணைந்துள்ளனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் சேர்ந்து போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்து மாநகராட்சி தேர்தலை சந்திப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ராஜ் தாக்கரேயை தங்களது பக்கம் இழுத்து வந்துவிட வேண்டும் என்பதற்காக மகாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பல முறை ராஜ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார். சிவசேனாவில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இணைத்துவிட்டு கட்சிக்கு தலைமை தாங்கும்படியும் ஏக்நாத் ஷிண்டே ராஜ் தாக்கரேயிடம் கேட்டார். ஆனால் ராஜ் தாக்கரே அதனை நிராகரித்துவிட்டார்.

தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ளது. இந்த மகாவிகாஸ் அகாடியில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.