தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், போடி, குரங்கணி, கொட்டகுடி, முதுவாக்குடி, டாப்ஸ்டேசன், முட்டம், கொம்புதூக்கி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 2-ஆவது நாளாக அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, போடிமெட்டு மலைக் கிராமங்களில் சூறாவளிக் காற்றுடன் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தோட்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் இந்தப் பகுதியில் மண் சரிவு ஏற்படக்கூடிய இடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.