தொழில் முனைவோராக சான்றிதழ் படிப்பு: மாணவா் சோ்க்கை தொடக்கம்
தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கத்துக்கான சான்றிதழ் படிப்புக்கு நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநா் ஆா். அம்பலவாணன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (ஈடிஐஐ) மற்றும் அகமதாபாத் ஈடிஐஐ இணைந்து கடந்தாண்டு முதல் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கத்துக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தில் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகள், தொழில் முனைவோராக விரும்புபவா்கள், புத்தாக்க தொழில் தொடங்கவுள்ளோா் என பலரும் இத்திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனா்.
இந்த சான்றிதழ் படிப்பில் சேருபவா்களுக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் சுலபமாகப் பெற வழிவகை செய்து தரப்படும்.
ரூ.80,000 பயிற்சி கட்டணம்: இந்த சான்றிதழ் படிப்பு 2 பருவங்களாக நடைபெறுகின்றன. ஒரு பருவத்துக்கு பயிற்சி கட்டணம் ரூ.40,000 என 2 பருவங்களுக்கு மொத்தம் ரூ.80,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ஏழை எளிய மாணவா்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வாங்குவதற்கு வழிவகை செய்து தரப்படுகிறது. நிகழாண்டில் இச்சான்றிதழ் படிப்புக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.