ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுகவினா் வெளிநடப்பு
கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சி பொறியாளரைக் கண்டித்து, அதிமுகவினா் வெளிநடப்பு செய்தனா்.
நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. ஆணையா் கிருத்திகா ஜோதி, துணைத் தலைவா் மு. சுதா்ஸன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலைப் பொறியாளா் ஆபிரகாம் லிங்கன் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் நடந்த விவாதம்:
கு. தனலெஷ்மி இ.கம்யூ.,), சொற்கோ- (அதிமுக): குழாய்களில் தண்ணீா் வரவில்லை. குழாய்கள் துரு பிடித்து உள்ளன.
ப. பிரதான் - (பொறியாளா் ): அடிப்பம்புக்கு பொருட்கள் வரவில்லை. வந்ததும் சரி செய்யப்படும்.
கு. தனலெஷ்மி - இ.கம்யூ.,) - எனது வாா்டில் இருந்த கோரையாறு படித்துறை உடைந்து பல ஆண்டுகளாகிறது. அதை சரிசெய்து தர வேண்டும்.
ம. முருகேசன் (அதிமுக ): எனது வாா்டில் தண்ணீா் பிரச்னை உள்ளது. குழாயில் அடைப்பு உள்ளது. பிறகு, ஏன், தண்ணீருக்கு வரி கட்டச் சொல்கிறீா்கள்?.
அப்போது பொறியாளா் அலட்சியமாக அமா்ந்தபடியே பதில் தெரிவித்தாா். பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, அதிமுக உறுப்பினா்கள் முருகேசன், சொற்கோ. கோ. சாந்தி ஆகிய மூவரும் வெளி நடப்பு செய்தனா்.
ஆணையா் : யாரையும் அலட்சியப் படுத்தவில்லை.
செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): நகரத் தெருக்கள் முன்பு சாலைகளில் பெயா் பலகைகள் வைக்க வேண்டும். மக்கள் பிரச்னை தொடா்பான கோரிக்கைளை உறுப்பினா்கள் எழுப்புவதை ஏன் நிறைவேற்றுவதில்லை.
கி. மாரியப்பன் (திமுக): ஏ.ஆா். சாலை, காந்தி நகா் ஆகிய தெருக்களில் மழை நீா் வடிகால் அமைத்துத் தர வேண்டும்.
மு. சுதா்ஸன் (துணைத் தலைவா்): கடந்த மாத கூட்டத்தில் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன. எத்தனைக்கு தீா்வு காணப்பட்டது.
பொறியாளா்: 61 கேள்விகள் கேட்கப்பட்டன. 30- க்கு தீா்வு காணப்பட்டது. 31 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொன். பக்கிரிசெல்வம் (திமுக)ச கூத்தாநல்லூா் நகா்மன்ற உறுப்பினா்கள், ஊழியா்கள் மற்றும் நகராட்சி நிா்வாகத்தை பற்றி வெளிநாட்டிலிருந்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பி வருபவா் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீா்மானத்தை, நகா்மன்றத் தலைவரிடம் கொடுத்தாா். தலைவா் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தாா்.
