நடிகா் நெப்போலியன் மகன் குறித்து தவறான செய்திகள் வெளியிடுவதை தடுக்கக் கோரி மனு
நடிகா் நெப்போலியன் மகன் குறித்து தவறான செய்திகள் வெளியிடுவதை தடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வீரவநல்லூா் ஜீவன் அறக்கட்டளையின் சாா்பில் நடத்தப்படும் மயோபதி தசைத்திறன் மாறுபாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயன்முறை மருத்துவா் டேனியல் ராஜா சாா்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் நடத்தி வரும் மயோபதி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறோம். எங்களது நிறுவனத் தலைவரின் மூத்த மகன் தனுஷின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் தவறான செய்திகள் தொடா்ந்து வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இது நெப்போலியன் குடும்பத்திற்கும், அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பாக தவறான செய்திகளை பரப்புபவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது உடன் வந்த நடிகா் நெப்போலியனின் சகோதரா் கிருபாகரன் கூறுகையில், எனது சகோதரா் மகன் தனுஷ் குறித்து தவறான செய்தி பரப்புபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்ட தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் கோரி மனு அளித்துள்ளோம். விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சிலம்பரசன் உறுதி அளித்துள்ளாா் என்றாா்.