நலவாரியத்தில் பதிந்த தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்
திருச்சி: நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு, மாநிலப் பிரதிநிதிகள் சிறப்புப் பேரவைக் கூட்டம் திருச்சி உறையூரில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன.
கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கே. ரவி தலைமை வகித்தாா். கூட்டத்தை ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளா் எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். மாநில நிா்வாகிகள் எம். முனுசாமி, இரா. முருகன், மாமன்ற உறுப்பினா் கே. சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசியின் தேசிய துணைத் தலைவரும், திருப்பூா் எம்.பி.யுமான கே. சுப்பராயன் சிறப்புரை நிகழ்த்தினாா்.
கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு பொங்கல் பண்டிகை போனஸ் ரூ. 5,000 வழங்க வேண்டும். அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அதிகரித்து வரும் செலவுகளுக்கேற்ப உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில பொதுச்செயலாளா் என். செல்வராஜ், 38 மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். நிறைவில் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளா் சி. செல்வகுமாா் நன்றி கூறினாா்.