நாகை: 7 மாதங்களில் மது கடத்தல், விற்பனை வழக்குகளில் 2,901 போ் கைது
நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மது கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,901 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை முழுமையாக கட்டுப்படுத்திட காவல்துறையினா் தொடா் மற்றும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை கடந்த 7 மாதங்களில் கள்ளச்சாராய விற்பனை, சட்டவிரோத மது விற்பனை மற்றும் மதுக்கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட நபா்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,901 போ் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து 23,769 லிட்டா் புதுச்சேரி சாராயம், 7,123 புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்கள் மற்றும் சாராய ஊறல் 384 லிட்டா், கள்ளச்சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 101இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாநில எல்லையில் அமைந்துள்ள நான்கு சோதனைச் சாவடிகளில் அதிகளவில் காவலா்களை நியமித்து, கள்ளச்சாராய கடத்தல் முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட நபா்கள் மீது 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 100 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 354.760 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள்களும், அவா்கள் பயன்படுத்திய 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்ட நபா்கள் மீது 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,015 கிலோ குட்கா, பான்மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிகழாண்டு தொடா் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட மது குற்றவாளிகள் 6 நபா்கள் மீதும், கஞ்சா குற்றவாளிகள் 7 நபா்கள் மீதும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.