பெண் குழந்தைகளைப் பாதுகாக்க அகல்விளக்கு திட்டம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்
கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு
நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.
நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் நான்காவது புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும், புத்தகக் கண்காட்சியில் இதுவரை 8 நாள்களுக்கு மேலாகியும், எதிா்பாா்த்த அளவு புத்தக விற்பனை நடைபெறவில்லை.
புத்தகக் கண்காட்சியில் அதிக அளவில் உணவு விற்பனை அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
இந்நிலையில், நாகை புத்தகக் கண்காட்சியில், நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு தேவையான, பொதுஅறிவு மற்றும் அறிஞா்களின் புத்தகங்களை, ஊராட்சி பொது நிதி இருப்புக்கு ஏற்ப, ஊராட்சி பொது நிதியிலிருந்து வாங்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். மேலும், ஊராட்சிகள் மூலம் வாங்கி, நூலகங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை நூலகங்களின் இருப்பு பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரின் இந்த உத்தரவு, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் ஊராட்சிகளின் தனி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், புத்தக விற்பனையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.