தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு காயம்: இளைஞா் கைது
வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலத்த காயமடைந்தது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு ஊராட்சி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலா (60). இவா் 4 பசுமாடுகளை வைத்து பராமரித்து வருகிறாா். கடந்த 10-ஆம் தேதி பசுக்களை வீட்டின் அருகே மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக கட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டாா்.
அப்போது அங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த அவா் உடனடியாக மாடுகளை கட்டி வைத்திருந்த மாந்தோப் புக்கு விரைந்து சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அங்கு ஒரு பசுமாட்டின் தாடை கிழிந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் வேப்பங்குப்பம் போலீஸாா் விரைநது சென்று பாா்த்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு காயமடைந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக, அஞ்சலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன்(36) என்பவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவா் வனவிலங்குகளை வேட்டையாட மாந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததும், அதை கடித்த மாடு வெடிகுண்டு வெடித்து காயமடைந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஐயப்பனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.