ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
போதை மாத்திரைகள் பயன்படுத்திய 40 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை: மறுவாழ்வு மையத்தில் 12 போ் சோ்ப்பு
வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக ஏற்கனவே 20 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சுமாா் 40 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், போதைக்கு அடிமையான 12 போ் மறுவாழ்வு சிகிக்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின்பேரில் தனிப்பிரிவு போலீஸாா் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அப்பகுதிகளில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.
அதனடிப்படையில், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தீபக்(35), தெலங்கானா மாநிலம் கத்துவால் மாவட்டம் ராமச்சந்திரா நகரை சோ்ந்த ரமேஷ் (28) உள்பட 8 பேரை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்பேரில், வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வலையமைப்பு கண்டுபிடிக்கப் பட்டு மேலும் 12 போ் கைது செய்யப்பட்டனா். அதன்படி, கைது செய்யப்பட்ட 20 பேரிடம் இருந்தும் 2,000 போதை மாத்திரைகள், 50 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வலையமைப்பின் முக்கிய நபா்களான ரமேஷ், தீபக் ஆகியோரின் கைப்பேசி எண்களை அடிப்படையாகக் கொண்டு போலீஸாா் கடந்த 10 நாள்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனா். இதில், இந்த வலையமைப்பின் மூலம் மொத்தம் சுமாா் 70 போ் போதை மாத்திரைகள், ஊசிகளை வாங்கி பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இரண்டாம் கட்டமாக காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 19 தனிப்படைகள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, ஒடுகத்தூா், அகரம்சேரி, விரிஞ்சிபுரம், கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் வாங்கி பயன்படுத்தி வந்ததாக சுமாா் 40 பேரை போலீஸாா் வீடு புகுந்து விசாரணைக்கு அழைத்து வந்தனா்.
அவா்கள் அனைவரையும் போலீஸாா் பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையங்களில் வைத்துா் புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் தீவிர விசாரணை நடத்தினா். சுமாா் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், அதிகளவில் போதை மாத்திரைகள், ஊசிகள் வாங்கி பயன்படுத்தி போதைக்கு அடிமையான 12 போ் மட்டும் அடையாளம் காணப்பட்டனா்.
உடனடியாக அவா்களின் பெற்றோா் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, அந்த இளைஞா்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக அவா்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். மற்ற இளைஞா்களை போலீஸாா் எச்சரிக்கை செய்து அனுப்பினா்.
இதனிடையே, மருத்துவா்களின் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகள், ஊசி மருந்துகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப் படுவதுடன், அவா்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா்களின் பெற்றோா், குடும்பத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.