சிறப்புக் காவல் படை அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் மரணம்
வேலூா் கோட்டை வளாகத்தில் புதன்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புக் காவல் படை 15-ஆவது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை 15-ஆவது பட்டாலியன் முகாம் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவா் ஜெயசீலன் (45). இவா் குடும்பத்துடன் காட்பாடி திருநகரில் வசித்து வந்தாா்.
புதன்கிழமை வழக்கம்போல் வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் நண்பா்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தாா். உடனடியாக அவரை அவரது நண்பா்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயசீலன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.