நாட்றம்பள்ளி: வனப்பகுதியில் விட்ட கரடி வனத்துறையினரை தாக்க முயற்சி
நாட்றம்பள்ளி அருகே பிடிபட்ட கரடியை வனப்பகுதியில் விட்ட போது அது வனத்துக்குள் ஓடாமல், மீண்டும் வனத்துறை ஜீப் மீது ஏறி வனத்துறையினரைத் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே மேல்மாமுடி மானப்பள்ளியில் உள்ள விவசாய நிலத்திற்குள் இரண்டு குட்டி கரடிகளுடன் தாய் கரடி, ஒரு ஆண் கரடி என நான்கு கரடிகள் தண்ணீர் தேடி வந்த போது அங்கு தண்ணீர் குடித்து விட்டு ஆண் கரடி மற்றும் இரண்டு குட்டி கரடிகள் கொத்தூர் காப்பு காட்டிற்கு உள்ளே சென்றுவிட்டன. ஆனால் ஒரு தாய் கரடி மட்டும் வழிதவறி பேட்டராயன் வட்டம் பகுதியில் புகுந்து மணிமேகலை என்ற பெண்ணை தாக்கிவிட்டு அங்குள்ள ராமி என்பவரின் வீட்டின் சுற்றுச் சுவர் மீது ஏறி குதித்து பூச்செடிக்குள் தஞ்சம் அடைந்தது.
பின்னர் இது குறித்து அறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வனச் சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கரடி வனத்துறையினர் விரித்த வலையில் சிக்கியது.
வலையில் சிக்கிய கரடியை கூண்டுக்குள் அடைத்து ஓசூர் வனக்கோட்ட கால்நடை மருத்துவர் ஜெயசந்திரன் என்பவரை வரவழைத்து கரடியை பரிசோதனை செய்து ஏற்கனவே 3 கரடிகள் சென்ற கொத்தூர் காப்பு காட்டில் விட்டனர்.
அப்போது அந்தக் கரடி வனப்பகுதிக்குள் செல்ல வழி தெரியாமல் மீண்டும் வனத்துறையினர் நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பி வந்து வனத்துறை ஜீப் மீது பாய்ந்து அவர்களை தாக்க முயன்றது. இதனைப் பார்த்த வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக வனத்துறையினர் வாகனங்களில் ஹாரன் சப்தம் எழுப்பியும் கூச்சல் போட்டதால் கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.