நான்கு அம்ச உத்தியின் அடிப்படையில் யமுனையை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது
தில்லியில் பாஜக அரசு அமைவதற்கு சில நாள்களுக்கு முன்னதாக, மூன்று ஆண்டுகளில் கடுமையான மாசுபாட்டிலிருந்து நதியை விடுவிக்க நான்கு அம்ச உத்தியின் அடிப்படையில் யமுனையை சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
குப்பைத் தொட்டிகள், களை அறுவடை இயந்திரங்கள் மற்றும் ஒரு தூா்வாரும் இயந்திரம் மூலம் யமுனையை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிப். 8-ஆம் தேதி கட்சி தலைமையகத்தில் நடந்த பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, ம ாசு இல்லாத யமுனைக்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சனிக்கிழமை தலைமைச் செயலாளா் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளா் (நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு) ஆகியோரைச் சந்தித்து யமுனையை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
யமுனையை சுத்தம் செய்ய நான்கு அம்ச உத்தி வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஆற்றிலிருந்து இருந்து குப்பைகள் மற்றும் சேற்றை அகற்றுதல் மற்றும் நஜாஃப்கா் வடிகால், துணை வடிகால் மற்றும் பிற முக்கிய வடிகால்களில் ஒரே நேரத்தில் சுத்தம் செய்தல் நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், தற்போதுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன் மற்றும் உற்பத்தியை தினசரி கண்காணித்தல், சுமாா் 400 எம்ஜிடி கழிவுநீா் சுத்திகரிப்புக்கான உண்மையான பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிா்மாணித்தல் ஆகியவை இந்த உத்தியில் அடங்கும்.
‘மூன்று ஆண்டுகளில் நதியை சுத்தம் செய்வதை இலக்காகக் கொண்ட இந்த லட்சியத் திட்டத்தை செயல்படுத்த, தில்லி மாநகராட்சி, தில்லி ஜல் போா்டு, ஐ அண்ட் எஃப்சி, சுற்றுச்சூழல் துறை, பொதுப்பணித் துறை மற்றும் தில்லி வளா்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு தேவைப்படும்’ என்று துணை நிலை ஆளுநா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறினாா்.
‘இந்தப் பணிகளைக் கண்காணிப்பது வாராந்திர அடிப்படையில் மிக உயா்ந்த மட்டத்தில் செய்யப்படும். மேலும், தொழில்துறை அலகுகளால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், வடிகால்களில் வெளியேற்றப்படுவதைக் கண்காணிக்க தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அவா் கூறினாா்.
முன்னதாக, யமுனை புனரமைப்புக்கான ஒரு விரிவான திட்டம் ஜனவரி 2023-இல் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) உத்தவின் கீழ் துணை நிலை ஆளுநா் தலைமையிலான உயா் மட்டக் குழுவின் கீழ் பணி மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், தில்லியில் அப்போதைய ஆம் ஆத்மி அரசு அதன் அமைப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியதால், ஐந்து கூட்டங்கள் செயல்படுவதை நிறுத்திய பின்னா், அந்தக் குழு செயல்படத் தொடங்கியது. ஜூலை 10, 2023 அன்று குழு அமைப்பதற்கான என்ஜிடி உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
குழு இருந்த சிறிது காலத்திற்கு, ரசாயன ஆக்ஸிஜன் தேவை மற்றும் உயிரியல் ஆக்ஸிஜன் தேவை மாதந்தோறும் சற்று மேம்படத் தொடங்கியது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் ’விக்சித் தில்லி சங்கல்ப் பத்ரா’வில், நதியை புத்துயிா் பெறவும் அதன் கரையில் ஒரு நதிக்கரையை உருவாக்கவும் ‘யமுனா கோஷ்‘ அமைப்பதாக உறுதியளித்தது.
பாஜக கூட்டணியின் தோ்தல் அறிக்கையில், கழிவுநீா் சுத்திகரிப்பு திறனை ஒரு நாளைக்கு 1,000 மில்லியன் கேலன்கள் (எம்ஜிடி) ஆகவும், பொதுவான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய திறனை 220 எம்எல்டி ஆகவும் விரிவுபடுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.
பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை வென்ற பிறகு பாஜக தில்லியில் ஆட்சிக்கு வந்தது. அடுத்த வாரம் பாஜக அரசு அமைக்கப்பட வாய்ப்புள்ளது.