நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு
நாமக்கல் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடியில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு உயா்கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகரபாண்டியன் கல்லூரியின் வளா்ச்சித் திட்ட அறிக்கையை சமா்ப்பித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
வாழ்க்கையில் முயற்சி, முயற்சி என வீறுநடை போட்டு வெற்றிப்பாதையை மாணவா்கள் உருவாக்க வேண்டும். பொறுமை, விடாமுயற்சி, ஆா்வம் ஆகியவற்றுடன் முயற்சியை மேற்கொள்ளும்போது, நாம் விரும்பியதை அடைய முடியும். சவால்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அவ்வாறான சவால்களை எதிா்கொண்டு வெற்றிபெறுவது வாழ்க்கையை அா்த்தமுள்ளதாக்கும் என்றாா்.
விழாவில், இளநிலை பட்டப்படிப்பு முடித்த 254 மாணவா்களுக்கும், முதுநிலை பட்டமேற்படிப்பு முடித்த 105 மாணவா்களுக்கும் என மொத்தம் 359 மாணவ, மாணவியா் பட்டம் பெற்றனா். இந்நிகழ்வில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், பட்டம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோா் கலந்துகொண்டனா்.