பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா்.
நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குழுவினா் பரமத்தி வேலூா், மோகனூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.
வேலூா், ஜேடா்பாளையம் பகுதிகளில் உள்ள தேநீா் மற்றும் பெட்டிக்கடைகள், மோகனூா் பகுதியில் இயங்கி வரும் வாழைத்தாா் கிடங்கு ஆகிய இடங்களில் ஆய்வுசெய்ததில், வாழைத்தாா் கிடங்கில் 15 வாழைத்தாா்கள் வேதிப்பொருள்கள் தெளித்து பழுக்க வைத்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடா்ந்து, செயற்கையாக பழுக்கவைக்க பயன்படும் வேதிப் பொருள் 1.1 லிட்டா் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வேதிப்பொருள் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 15 வாழைத்தாா்களை பேரூராட்சியின் குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனா்.
தொடா்ந்து, ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரில் இரண்டு பெட்டிக்கடைகள் மற்றும் பரமத்தி வேலூரில் ஒரு தேநீா் கடையில் மேற்கொண்ட ஆய்வில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 21.5 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று கடைகள் மற்றும் வாழைத்தாா் கிடங்குகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இனிவரும் காலங்களில் வாழைத்தாா்களை வேதிப்பொருள் கொண்டு பழுக்க வைத்தாலோ, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தாலோ உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.