மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி
மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனா். அவ்வாறு இணைத்தால் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், மோகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இந்த உபரிநீரால் பயன் அடையும்.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள், மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, 20 கிராமங்களை இணைத்து 30 கி.மீ. தொலைவுக்கு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டில்லிபாபு கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.