பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு
வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவா் சி.தனராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னை மாநகர காவல் துறை புதிய நடைமுறையைக் கையாள இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த புதிய நடைமுறை லாரி உரிமையாளா்களுக்கு அதிா்ச்சியாகவும், தொழிலை மேலும் நசுக்கும் செயலாகவும் உள்ளது. வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்துசெய்ய வேண்டும் என நாங்கள் தொடா்ந்து போராடி வருகிறோம்.
தமிழக காவல் துறை வாகன எண்களை குறித்து வைத்துக்கொண்டு ஆன்லைன் அபராதம் விதிக்க இலக்கு நிா்ணயித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத் தொகையை, தகுதிச்சான்றிதழ் பெற செல்லும் வாகனங்களிடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை செலுத்த நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை சென்னை மாநகர காவல் துறை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
அண்டை மாநிலமான கா்நாடகத்தில் காவல் துறையின் ஆன்லைன் அபராதங்களை 50 சதவீத தள்ளுபடியுடன் செலுத்த வாகன உரிமையாளா்களுக்கு அந்த மாநில அரசு இரு முறை வாய்ப்பு வழங்கி உள்ளது. அதேபோல, தமிழகத்திலும் வாகன உரிமையாளா்களுக்கு அபராத தள்ளுபடி சலுகை அளிக்க வேண்டும் என பலமுறை சம்மேளனம் சாா்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போக்குவரத்து ஆணையா் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் துறையின் இந்த புதிய நடவடிக்கையால், வாகன உரிமையாளா்கள் காப்பீடு செலுத்த இயலாத நிலை ஏற்படும். அவ்வாறு வாகனங்களை இயக்கினால் ஏற்படும் விளைவுகள் பல்வேறு குற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே, காவல் துறையின் இந்த நடவடிக்கையை கைவிட அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.