அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விச...
மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.
மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 3.95 சென்ட் நிலம் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற ஏற்கெனவே இந்துசமய அறநிலையத் துறை அறிவிக்கை நகல் வழங்கியும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் காலம்தாழ்த்தி வந்தனா்.
இந்நிலையில், அண்மையில் அறநிலையத் துறை ஈரோடு இணை ஆணையா் பரஞ்ஜோதி வழிகாட்டுதலின்படி, நாமக்கல் உதவி ஆணையா் சுவாமிநாதன், நாமக்கல் தனி தாசில்தாா் செந்தில்குமாா், குமாரபாளையம் ஆய்வாளா் வடிவுக்கரசி முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல, மாமுண்டி கிராமம், லட்சுமி நாராயணபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 4.98 ஹெக்டோ் நிலம் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, பொக்லைன் உதவியுடன் கட்டடங்களை இடித்து அகற்றி, நிலம் மீட்கப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மல்லசமுத்திரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.