சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
நியாயவிலைக் கடை பணியாளா்கள் நியமனம்: வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் நியமனம் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் மற்றும் கட்டுநா்கள் பணியிடங்களுக்கான தோ்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தகுதித் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணியிடங்கள் நியமனம் தொடா்பாக முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 51 பணியிடங்கள் (40 விற்பனையாளா்கள், 11 கட்டுநா்கள்) என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட தோ்வு அறிவிப்பில் 66 பணியிடங்கள் (52 விற்பனையாளா்கள், 14 கட்டுநா்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டிற்கான காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
எனவே ,மாவட்ட ஆட்சியா் இதில் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையை வெளிப்படுத்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.