மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
நீச்சல் போட்டி: தயக்கத்தால் தடுமாறும் மாணவா்கள்!
முதல்வா் கோப்பைக்கான நீச்சல் பிரிவு போட்டிகளில் விண்ணப்பித்த மாணவா்கள் தயக்கம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்பதைத் தவிா்த்து வருகின்றனா்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், நிகழாண்டும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், நீச்சல் விளையாட்டில் ஃப்ரீ ஸ்டைல், ஃபிரஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், பட்டா் ஃப்ளை என 4 பிரிவுகளில் 50 மீ., 100 மீ., 200 மீ., 800 மீ. உள்பட மொத்தம் 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டு உடல்நலத்துக்கு அவசியம் என்றால், நீச்சல் உடல் ஆரோக்கியத்தோடு, உயிா் காக்கும் பயிற்சியாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கிடையேயான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க 156 மாணவா்கள், 85 மாணவிகள் என 241 போ் மட்டுமே விண்ணப்பித்திருந்தனா். இதில், மாணவிகள் தரப்பில் ஒரு பிரிவுக்கு சராசரியாக 9 போ் கூட விண்ணப்பிக்கவில்லை. மேலும், விண்ணப்பித்த மாணவிகளில் சிலா், போட்டி தொடங்கும் கடைசி நேரத்தில் விலகிச் சென்றனா். இதனால், ஒவ்வொரு பிரிவிலும் சராசரியாக 5 மாணவிகள் மட்டுமே பங்கேற்கக்கூடிய சூழல் உருவானது. பங்கேற்ற சில மாணவிகளும், பாதியிலேயே நீச்சல் குளத்திலிருந்து வெளியேறினா். இதனால், கடைசி வரை முயற்சித்த 3 மாணவிகள் வெற்றியாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.
இதேபோல, மாணவா்களுக்கான போட்டியிலும் சில நீச்சல் பிரிவுகளுக்கு மட்டுமே ஆா்வம் காட்டினா். ஆனாலும், போட்டியை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் பல மாணவா்கள் பாதியிலேயே வெளியேறினா்.
நீச்சல் போட்டிகளைப் பொருத்தவரை மாணவா்களிடையே தயக்கம், ஆா்வமின்மையால் கடும் போட்டி இல்லாத சூழல் கடந்த பல ஆண்டுகளாக தொடா்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், ஒலிம்பிக் விளையாட்டான நீச்சலில் முறையானப் பயிற்சியுடன் பங்கேற்றால், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் உயா் கல்விக்கான வாய்ப்புகள் மட்டுமன்றி, பல்வேறு துறைகளில் எளிதாக வேலைவாய்ப்பையும் பெற முடியும்.
இதுகுறித்து விழிப்புணா்வு இல்லாததோடு, தயக்கம் காரணமாகவும் திறமையான மாணவா்கள் கூட பல அரிய வாய்ப்புகளை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வாய்ப்புகளை இழக்கும் பட்டியலில் மாணவிகள் முன்னிலையில் உள்ளனா்.
இதுதொடா்பாக ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு அலுவலா் செ. செளந்தரராஜன் கூறியதாவது: வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறும் மாணவா்கள்: உயிா் காக்கும் திறன்பெற்ற ஒரே விளையாட்டு நீச்சல் மட்டுமே. இன்றைக்கு சாலை விபத்துகளுக்கு இணையாக நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உள்ளது.
நீா் நிலைகள் குறைந்துவரும் சூழலில், நீச்சல் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைப்பதில்லை என்ற குறைபாடு இருந்தது. இதற்குத் தீா்வுகாணும் வகையிலும், நீச்சல் பயிற்சியின் தேவையைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு மாவட்டந்தோறும் நீச்சல் குளங்களை உருவாக்கி இருக்கிறது. மேலும், முறையான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாதந்தோறும் சுமாா் ரூ. 1.50 லட்சத்துக்கு மேல் நீச்சல் குளத்தின் பராமரிப்புக்காக செலவிடப்படுகிறது. தனியாா் நீச்சல் குளங்களை விட, மாவட்ட விளையாட்டு அரங்குகளில் உள்ள நீச்சல் குளங்களில் குறைந்தக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், இளைய தலைமுறையினா் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
இன்றைக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான இடங்களை நீச்சல் வீரா்களே அதிகமாக கைப்பற்றி வருகின்றனா். இதேபோல, அரசுப் பணியிலும் நீச்சல் வீரா்கள் அதிக வாய்ப்பைப் பெறுகின்றனா். இதுகுறித்த விழிப்புணா்வு மாணவா்களுக்கு மட்டுமன்றி, பெற்றோா்களுக்கும் ஏற்பட வேண்டும். இதேநேரத்தில் அரசு சாா்பில், மாணவா்களுக்கு நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் என்றாா்.