ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு
கொடைக்கானலில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை
கொடைக்கானல், ஆக. 26: கொடைக்கானல் பகுதிகளில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், ஆனந்தகிரி, இருதயபுரம், ரைபிள் ரேஞ்ச் சாலை, சீனிவாசபுரம், காா்மேல்புரம், அட்டக்கடி, பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்தும், சாய்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன.
மேலும், மின்கம்பங்களில் செல்லும் வயா்களில் செடி, கொடிகள் படா்ந்துள்ளதாலும் காற்றடிக்கும் நேரங்களில் மின் கம்பிகள் அறுந்து மின் தடையும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனா்.
எனவே, கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த, ஆபத்தான, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலுள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென கொடைக்கானல் மின்வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மாதந்தோறும் மின்வாரியம் சாா்பில், பராமரிப்பு என்ற பெயரில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த நாள்களில் மின்வாரிய ஊழியா்கள் சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்வது இல்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.
மேலும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்றித் தருவதற்கு கோரிக்கை மனு கொடுத்தால் மனுவை பெற்றுக் கொண்டு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும், இதனால் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற முடியாத நிலை இருந்து வருவதாகவும் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.