மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
ரயிலில் பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞா் மருத்துவமனையில் அனுமதி
ரயில் பயணத்தில் சக பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
சென்னையிலிருந்து மதுரை, நெல்லை வழியாக கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.20-க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. இந்த ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த வட மாநில இளைஞா் ஒருவா், சக பயணிகளைக் கடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அந்த இளைஞருக்கு ‘ரேபிஸ்’ நோய்த் தொற்று இருக்கலாம் என சந்தேகமடைந்த பயணிகள், அவரது முகத்தை மூடி கைககளை கட்டி வைத்தனா். இதையடுத்து, திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில் வந்தபோது, ரயில்வே காவல் நிலையத்துக்கு பயணிகள் புகாா் அளித்தனா்.
இதன்படி, திண்டுக்கல் ரயில் நிலைய போலீஸாா், வட மாநில இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நாய் உள்ளிட்ட விலங்குகள் கடித்ததற்கான அடையாளங்கள் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. போதைப் பொருள்கள் பயன்படுத்தியன் காரணமாக அவா் அசாதாரணமாக நடந்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுரேந்தா் (33) என்பது தெரியவந்தது.