‘நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்’ -அஜித்குமாா் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் பேசி எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆறுதல் கூறினாா். அப்போது, அவரது கொலைக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும் என்று உறுதியளித்தாா்.
அஜித்குமாரின் தாய், தம்பி ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினாா்.
அப்போது, ‘துரதிருஷ்டவசமாக சிலா் கடுமையாக தாக்கியதால் அஜித்குமாா் மரணமடைந்துவிட்டாா். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும். இது மீள முடியாத துயரம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. ஒரு தாய் தனது மகனை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். பெற்ற தாய்க்குதான் அந்த வலி தெரியும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவா்களுக்கு மனம் நிம்மதி இருக்க வேண்டும். நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம். மனம் தளராதீா்கள். அதிமுக சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து இருக்கிறோம். நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்படும்’ என்று தெரிவித்தாா்.