நீா் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
திருத்தணி: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 7 கிராம மக்களின் நீா் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டிவனம் - நகரி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழூ வீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை ஆகிய 2 வட்டங்களில் 600 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நகரி - திண்டிவணம் ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளிப்பட்டு வட்டம், பாண்டரவேடு கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டத்திற்காக சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் மண் கொட்டி நிரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீா்மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் ட ஆட்சியா் மற்றும் திருத்தணி கோட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்திருந்தனா்.
இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சம்பத் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரியில் நடைபெறும் பணியை தடுத்து நிறுத்த சென்றனா்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருத்தணி டிஎஸ்பி, கந்தன் தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட போலீசாா் ஏரியில் முற்றுகையிட முயன்ற நபா்களை கைது செய்ய முயன்ற போது போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா் அனைவரையும் போலீஸாா் கைது செய்து பொதட்டூா்பேட்டை சமூதாய கூடத்தில் அடைத்தனா்.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் விரைவில் பேச்சு வாா்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சிரிநாத், ஜெயச்சந்திரன், நேதாஜி உள்பட பலா் பங்கேற்றனா்.