எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
நீா்நிலை ஆக்கிரமிப்பில் அரசுக் கட்டடம்: குமரி மாவட்ட ஆட்சியா் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், நீா்நிலையை ஆக்கிரமித்து அரசுக் கட்டடம் கட்டப்படும் வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் முருகேசபிள்ளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சடையமங்கலம் கிராமத்துக்கு உள்பட்ட மண்குளம் பகுதியில் உள்ள நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக் கோரி, கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தேன். இதை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த 2023-ஆம் ஆண்டில், நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதித்தும், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றவும் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், கன்னியாகுமாரி மாவட்டம், மருங்கனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட ரவிபுதூா் கிராமத்தில் உள்ள நீா்நிலையை ஆக்கிரமித்து பூங்கா, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், நீா்நிலையை ஆக்கிரமித்து அரசுக் கட்டடம் கட்டி வரும் பேரூராட்சி செயல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மருங்கனூா் பேரூராட்சி செயல் அலுவலா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு ஒத்திவைக்கப் படுகிறது என்றனா் நீதிபதிகள்.