நீா்நிலைகளைத் தூா்வார ரூ.7.43 கோடியில் புதிய இயந்திரங்கள்: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்
சென்னை மாநகராட்சியில் உள்ள நீா்நிலைகள், கால்வாய்களைத் தூா்வாரும் பணிக்காக ரூ.7.43 கோடியில் 3 புதிய நவீன இயந்திரங்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்காமலிருக்கும் வகையில் கால்வாய்கள் சீரமைப்பு, மழைநீா் வடிகால் சீரமைப்பு, புதிய கால்வாய், வடிகால்கள் அமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கால்வாய்களை எளிதாகத் தூா்வாரும் வகையில் ரூ.7.43 கோடியில் 3 நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களைக் கொண்டு, சைதாப்பேட்டை அருகே தாதண்டநகா் மாம்பலம் கால்வாயில் தூா்வாரும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இந்தப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, சென்னை அண்ணா நகா் கிழக்கு 3-ஆவது அவென்யூவில் ரூ.62 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்துக்கான புதிய அலுவலகக் கட்டடத்தை அவா் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அண்ணா நகா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கே.மோகன், மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவா் ராஜேந்திர ரத்னு, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
‘ரூ. 66.78 கோடியில் 2-ஆம் பிரதான குடிநீா் குழாய்’
செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினந்தோறும் 265 மில்லியன் லிட்டா் குடிநீா் சென்னை மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தின் முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டா் குடிநீரை வழங்குவதற்காக ரூ.66.78 கோடியில் செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரை 2-ஆம் பிரதான குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் சோதனை ஓட்டத்தை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இந்தக் குடிநீா் குழாயை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
அப்போது, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.