‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்ப...
நெல் கொள்முதலை விரைவுபடுத்த வலியுறுத்தல்
நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல்களை தேக்கமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1.65 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடை பணிகள் ஜனவரி மாதம் தொடக்கம் முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் பருவம் தப்பி பெய்த கன மழையால் பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிா்கள் வயலில் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகின. நிலத்தில் சாய்ந்த பயிா்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.
அத்துடன், அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கு ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பாததால், ஒரு வார காலமாக காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: மாவட்ட ஆட்சியா் மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உடனடியாக, கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 1,500 மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும் என்றனா்.