நெல்லை: `ஆதரவற்ற பாட்டியின் வீட்டை மீட்டுக்கொடுத்த காவல்துறை' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த போலீஸார்!
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. 70 வயதான இம்மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது ஆதரவற்ற நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ரொக்கமாகவும் காசோலை மூலமாகவும் பராமரிப்புச் செலவுக்காக பணம் கொடுத்ததாகக்கூறி அவர் வாழ்ந்து வரும் வீட்டை அபகரிக்க முயன்றுள்ளார். அத்துடன் வீட்டைக் காலி செய்யுமாறும் கூறியுள்ளார்.

இதனால், மனமுடைந்த ரோஸ்மேரி நெல்லை மாநகர காவல்துறை அலுவலகத்திற்குச் சென்று தனது நிலையை எடுத்துக் கூறினார். மூதாட்டியின் புகாரைக் கேட்டறிந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மூதாட்டியின் வீட்டை அபகரிக்க முயன்ற நபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த சம்மந்தப்பட்ட நபர், மூதாட்டியின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்துவிட்டு வீட்டு பத்திரத்தை அந்த நபர் தனது பெயரில் மாற்றி வைத்திருந்தது தெரிய வந்தது.
மூதாட்டிக்கு காசோலை மூலம் பணம் அளிக்கப்பட்டதற்காக ஆதாரத்தைக் கேட்டதில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். ரோஸ்மேரியின் வீட்டை மீண்டும் அவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும். இல்லவிட்டால் வீட்டின் மதிப்பிற்கு இணையான பணத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என கூறியதால், உடனடியாக சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று அந்த வீட்டை ரோஸ்மேரியின் பெயருக்கே மறுபடியும் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

தனது வீடு தனக்கே மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை கண்ணீர் மல்க எழுதியுள்ளார். மூதாட்டியின் இந்த நன்றிக்கடிதம் நெல்லை மாநகர போலீஸார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், காவல்துறையினர் மக்களின் குறைகளுக்கு உடனடியாக செவிசாய்த்து நடவடிக்கை எடுத்தால் எத்தகைய நீதியையும் நிலை நாட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது.