மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
நெல்லையில் பிடியாணையில் இதுவரை 2,776 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,776 போ், நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஜாமீன் பெற்று, பின்னா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவுப்படி 2,776 குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மானூா் பகுதியில் 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ஆலங்குளம், நெட்டுரை சோ்ந்த ராஜா எனும் சண்முகநாதன் (29) கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாா்.
அவா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்தாா். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் குஜராத்தில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இவ்வாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலும் தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்ய போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.