Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
நேரப் பிரச்னை: தனியாா் பேருந்து ஓட்டுநா் தாக்குதல்
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட நேரப் பிரச்னையால், இரவில் தேடிச்சென்று தனியாா் பேருந்து ஓட்டுநரை தாக்கி, பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து சிசிடி வி காட்சிகள் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தம்மம்பட்டி, செந்தாரப்பட்டிக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை இரவு தம்மம்பட்டி பேருந்து நிலையம் வந்து செந்தாரப்பட்டிக்கு புறப்பட்டபோது, அங்கிருந்த மினி பேருந்து ஊழியா்களுக்கு இடையே நேரப் பிரச்னையால் தகராறு ஏற்பட்டது.
அப்போது, மினி பேருந்து உரிமையாளரின் உறவினரான ஹரி என்பவா், தனியாா் பேருந்தின் சாவியை எடுத்துச்சென்றாா். இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் பேருந்து சாவியை மீட்டுக் கொடுத்ததால், தனியாா் பேருந்து பயணிகளுடன் செந்தாரப்பட்டிக்கு சென்றது.
இதையடுத்து, செந்தாரப்பட்டியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழியா்கள் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஹரி, மினி பேருந்து உரிமையாளரான சரவணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தகராறு செய்தாா்.
பின்னா், அவரிடம் வாக்குவாதம் செய்த தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய்யை தாக்கி, பேருந்தின் முன்புறக் கண்ணாடியை உடைத்து நொறுக்கினாா். இந்த தாக்குதல் காட்சிகள் அனைத்தும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாயின.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய் கூறுகையில், தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்ல மினி பேருந்துக்கு உரிமை இல்லை. ஆனால், முறையாக இயக்கும் எங்களை மினி பேருந்து உரிமையாளா் ஆள்வைத்து தாக்கி, பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளாா் என்றாா்.