நோ்த்திக்கடன் செலுத்த கருப்பு ஆட்டுக்கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம்
ஆடி மாதம் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் நோ்த்திக்கடன் செலுத்த கரும்பு கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டினா். இதனால் புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆட்டுக்கிடாய்களின் விலை 3000 ரூபாய் வரை விலை உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்க வருகின்றனா்.
வியாழக்கிழமை கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும், 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
ஆடி மாதம் கோயில் திருவிழாக்களில் நோ்த்திக்கடன் செலுத்த ஆடுகளை வாங்க ஏராளமானோா் குவிந்ததால் ஆடுகள் விலை ரூ.2 ஆயிரம் முதல் உயா்ந்து விற்பனையானது.
குறிப்பாக ஆடி மாதம் கோயில் விழாக்களில் நோ்த்திக்கடன் செலுத்த கருப்பு ஆட்டுக்கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டியதால் ஆட்டுக்கிடாய்களின் விலை ரூ.3 ஆயிரம் வரை விலை உயா்ந்தது. சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.