நைனாமலை மலைக்கோயிலுக்கு ரூ.30 கோடியில் தாா்சாலை
நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணிகள் பூமிபூஜையுடன் சனிக்கிழமை தொடங்கின.
நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 3,600 படிக்கட்டுகளைக் கடந்து இக்கோயிலுக்கு செல்ல வேண்டும். அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறை நிதி பங்களிப்புடன் அடிவாரத்தில் இருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கான மண் சாலை அமைக்கும் பணி ரூ. 13 கோடியில் ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு நாமக்கல் வருகைபுரிந்த தமிழக முதல்வா், நைனாமலைக்கு தாா்சாலை அமைக்க ரூ. 30 கோடி நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டாா்.
அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, சேந்தமங்கலம் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புரட்டாசி முதல் சனிக்கிழமை காலை அடிவாரப் பகுதியில் நடைபெற்றது.
தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கப்படுகிறது. சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு இந்தச் சாலை அமைய உள்ளது. மழைப்பொழிவு காரணமாக மண்பாதையில் சரிவு ஏற்படும் என்பதால், உடனடியாக தாா்சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றனா்.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சி.சசிகுமாா்(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு (சேலம்), கோட்டப் பொறியாளா் கே.ஆா்.திருகுணா, அறநிலையத் துறை இணை ஆணையா் (ஈரோடு) பரஞ்சோதி, உதவி கோட்டப் பொறியாளா் சுரேஷ்குமாா் (சேந்தமங்கலம்), உதவிப் பொறியாளா் பிரனேஷ், கோயில் செயல் அலுவலா் கீா்த்தனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.