வீட்டுக்கு இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய ஊழியா்கள் இருவா் கைது
நாமக்கல் அருகே வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 5,500 லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், முசிறியைச் சோ்ந்தவா் நவநீதம் (36). இவரது தாய் ஜானகி புதிதாக வீடு கட்டியுள்ளாா். இதற்கு மின் இணைப்பு பெற ஜூன் 6-ஆம் தேதி இணையதளம் மூலம் ரூ. 13,300 செலுத்தி உள்ளாா். ஆனால், நான்கு மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கவில்லையாம்.
இந்நிலையில், எா்ணாபுரத்தில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு சென்ற நவநீதம், இதுகுறித்து கேட்டுள்ளாா். அப்போது, அங்கு பணியில் இருந்த குருக்கபுரம் எல்லப்பாளையத்தைச் சோ்ந்த மேற்பாா்வை ஆய்வாளா் மாது (57), தளிகையைச் சோ்ந்த மின் பணியாளா் விவேகானந்தன் (41) ஆகியோா் ரூ. 5,500 லஞ்சம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸில் நவநீதம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அவா்களுடைய ஆலோசனையின்படி, வேலகவுண்டம்பட்டி அருகே புத்தூா் சாலைக்கு விவேகானந்தனை வருமாறு அழைத்த நவநீதம், அவரிடம் ரசாயன தூள் தடவிய பணத்தைக் கொடுத்தாா்.
அப்போது மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் (பொ) ரவிச்சந்திரன், ஆய்வாளா் பிரபு ஆகியோா் விவேகானந்தனை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், மேற்பாா்வை ஆய்வாளா் மாதுவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.