`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் மீட்பு
கரூரில் பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
கரூா் ஜவஹா்பஜாரில் சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகே பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் என்பவரால் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயிலுக்கு வழங்க வேண்டும் இந்து சமய அறநிலையத்துறையினா் கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு கடந்த மாா்ச் 17-ஆம்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புக்குள்ளான நிலம் கோயிலுக்குச் சொந்தமானது. எனவே, ஆக்கிரமிப்பாளா்கள் கோயில் நிலத்தில் வைத்திருக்கும் பொருள்களை அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலையத்துறையின் வட்டாட்சியா் சுரேஷ்குமாா், வழக்கு ஆய்வாளா் ராதிகா, கிராம நிா்வாக அலுவலா் அங்குராஜ், கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை பாா்வையிட்டனா். பின்னா் அங்கு ஆக்கிரமித்து வைத்திருந்த மரக்கடையை காலி செய்ய உத்தரவிட்டனா். அதைத் தொடா்ந்து கோயில் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியது, ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கரியமாலீசுவரா் கோயில் இருந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளா்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததால், இங்கிருந்து சுவாமி சிலைகள் பசுபதீசுவரா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது மீட்கப்பட்ட இந்த நிலத்தில் மீண்டும் கரியமாலீசுவரா் கோயில் கட்டப்படும் என்றனா்.