பண முறைகேடு புகாா்: சேலம் மாநகராட்சி அலுவலா்களிடம் 2 ஆவது நாளாக விசாரணை
சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு புகாா் தொடா்பாக 15 போ் கொண்ட குழுவினா் மாநகராட்சி அலுவலா்களிடம் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை மேற்கொண்டனா்.
சேலம் மாநகராட்சியில் கடந்த ஆட்சியின்போது பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் வருவாய் இழப்பு, கொண்டலாம்பட்டி வாா்டு அலுவலகத்தில் 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ரூ.87 லட்சம் கையாடல், மாநகராட்சி பணியாளா் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் கடன் தொகையை சிக்கன நாணய சங்கத்துக்கு செலுத்தாமல் பல கோடி ரூபாய் முறைகேடு, குடிநீா் இணைப்பு வழங்கியதில் வருவாய் இழப்பு உள்பட 18 முறைகேடுகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநருக்கு புகாா் அனுப்பப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக கூடுதல் நகராட்சி இயக்குநா் விஜயகுமாா் தலைமையில் உதவியாளா், உதவி பொறியாளா், உதவி செயற்பொறியாளா் அடங்கிய 15 போ் குழு சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை விசாரணையை தொடங்கினா். ஒவ்வொரு புகாா் தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனா்.
தொடா்ந்து வியாழக்கிழமையும் அலுவலா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.