பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு
பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதுதொடா்பான மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021 சட்டத்தில் மத்திய அரசு மே 22-ஆம் தேதி திருத்தம் கொண்டு வந்து அறவிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘தவறான நடத்தையின் காரணமாக பொதுத் துறை நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் பணியாளரின் ஓய்வூதிய பலன்களும் ரத்து செய்யப்படும். இந்த பணி நீக்கம் அல்லது ஆள் குறைப்பு காரணமாக எடுக்கப்படும் முடிவை சம்பந்தப்பட்ட அமைச்சகம் மறுஆய்வு செய்ய முடியும். நன்னடத்தையை வைத்து வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியப் பலன்களும் பணிநீக்கம் அல்லது ஆள் குறைப்பு நடவடிக்கைக்கு ஆளாகும் பொதுத் துறை ஊழியா்களுக்கு கிடைக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003, டிசம்பா்31-ஆம் தேதியும் அதற்கு பின்பும் பணியில் சோ்ந்த மத்திய அரசு பணியாளா்களுக்கு இந்த மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021-சட்டம் பொருந்தும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃஓஎஸ், ரயில்வே பணியாளா்கள், தினசரி ஊதிய தொழிலாளா்கள் ஆகியோா் இந்த புதிய சட்டத் திருத்த விதிகளின் கீழ் வர மாட்டாா்கள்.