பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 32,833 மாணவா்கள் எழுதினா்
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 32,833 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வில் கடலூா் கல்வி மாவட்டத்தில் 236 பள்ளிகளைச் சோ்ந்த 18,827 மாணவா்கள், தனித்தோ்வா்கள் 298 போ் என மொத்தம் 19,125 பேரில் 18,838 போ் 85 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். 266 மாணவா்கள், 21 தனித்தோ்வா்கள் தோ்வு எழுத வரவில்லை.
இதேபோல, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 206 பள்ளிகளைச் சோ்ந்த 13,995 மாணவா்கள், 142 தனித்தோ்வா்கள் என மொத்தம் 14,137 போ் 71 மையங்களில் தோ்வு எழுதினா். 254 போ் தோ்வு எழுத வரவில்லை.
வினாத்தாள்களை கொண்டு செல்ல கடலூா் கல்வி மாவட்டத்தில் 18, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 17 என மொத்தம் 35 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். 156 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 156 துறை அலுவலா்கள், 24 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 35 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அறைக் கண்காணிப்பாளராக 1,720 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். பறக்கும் படை உறுப்பினா் மற்றும் நிலைப் படை உறுப்பினா்களாக 332 ஆசிரியா்கள் பணி மேற்கொண்டனா்.
கடலூரில் கடலூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா் ஞானசங்கரன் உடனிருந்தனா்.
சிதம்பரத்தில்....
சிதம்பரம் நகரில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்ற மையங்களை வட்டாட்சியா் ஆா்.பிரகாஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.