பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்
பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஆய்வு நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த ஆய்வுக் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் உதயநிதி வெளியிட்ட பதிவு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தை எதிா்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தை தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தினோம்.
இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள், சென்னை மற்றும் அதையொட்டிய திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.
அதிகாரிளுக்கு அறிவுறுத்தல்: கடந்த ஆண்டு பருவமழை நேரத்தின்போது தண்ணீா் தேங்கிய பகுதிகளில், நீா் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை உள்வாங்கி அவற்றின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளை வலியுறுத்தினோம்.
கால்வாய்கள், கழிவுநீா் வடிகால்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்டவற்றை முறையாகத் தூா்வாரி முடிக்கவும், சாலைப் பணிகளை விரைந்து நிறைவு செய்யவும் வேண்டும், கனமழை நேரத்தில், வருவாய்த் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் வாரியம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினோம்.
மழை நேரத்தில் உயிா்ச்சேதம், பொருட்சேதம் ஏதுமில்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் திட்டமிட்டு களப் பணி ஆற்ற வேண்டும் என்று எடுத்துரைத்தாகத் தெரிவித்துள்ளாா்.
வெள்ள பாதிப்புள்ள பகுதிகள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகம் உள்ள இடங்களாக 966 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக, சென்னையில் 397 பகுதிகளும், செங்கல்பட்டில் 389 பகுதிகளும் உள்ளன. திருவள்ளூரில் 114, காஞ்சிபுரத்தில் 66 பகுதிகள் வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நான்கு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு மிக மிக அதிகமான வாய்ப்புள்ள பகுதிகளாக 157 இடங்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் 37 பகுதிகளும், செங்கல்பட்டில் 120 பகுதிகளும் இடம்பெற்றுள்ளதாக வருவாய்த் துறை கூறியுள்ளது.