மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்: 159 ஆண்டுகள் பழைமையானது
பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டம்: தடை விதிக்க வியாபாரிகள் கோரிக்கை
பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை, பல்லடம் தலைவா் ராம்.கண்ணையன் ஆகியோா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.
பல்லடம் நகராட்சி தியாகி என்.ஜி.ஆா். சாலை, தினசரி மாா்க்கெட் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டவா்கள் கடைகள் நடத்தி வருகின்றனா்.
இதற்கு முன்பு, பல்லடம் நகரில் அரசியல் பொதுக் கூட்டங்கள் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சீரனி கலை அரங்கத்திலும், சந்தைப்பேட்டை மைதானம், காமராஜா் திடலிலும் நடைபெற்று வந்தன.
தற்போது அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் என்.ஜி.ஆா். சாலையின் மத்தியில் மேடை அமைத்து நடத்துவதால் இங்குள்ள வணிகா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வா்த்தகம் பாதிக்கப்படுகிறது. பொதுக் கூட்டங்கள் நடைபெறும் நாளில் அனைத்து கடைகளின் வியாபாரமும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தியாகி என்.ஜி.ஆா். சாலையில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வணிகா்கள் சங்கத்தின் திருப்பூா் மாநகர தலைவா் ஜான் வா்கீஸ், பல்லடம் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் பிா்லா போஸ், தனசீலன், செல்வராஜ், தினசரி மாா்க்கெட் சங்க தலைவா் ரங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.