சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
பள்ளிக் கட்டட விவகாரம்: மாணவா்களை அனுப்ப மறுத்து கிராமத்தினா் மீண்டும் போராட்டம்
திண்டுக்கல் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மீண்டும் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அழகுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 36 குழந்தைகள் படிக்கின்றனா். இந்தப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதற்கிடையே அழகுப்பட்டி பள்ளியைப் பாா்வையிட்ட ரெட்டியாா்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்துத் தருவதாகத் தெரிவித்தனா். ஆனால், கான்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதற்கான பொருள்களை வாகனத்தில் கொண்டு வந்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்கள், கான்கிரீட் கட்டடம் கட்டக் கோரி மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதை அறிந்து அங்கு வந்த கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு கான்கீரிட் கட்டடம் கட்டித் தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், கிராம மக்களைத் தொடா்பு கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், திமுக ஒன்றியச் செயலா் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா். அப்போது, பள்ளியை அங்கன்வாடி மையத்துக்கு மாற்றுவதாகவும், பள்ளிக் கட்டடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து அங்கன்வாடி மையத்துக்கு வழங்குவதாகவும் தெரிவித்தனா்.
இதை ஏற்க மறுத்த கிராம மக்கள், வீடுகளில் புதன்கிழமை கருப்புக் கொடி கட்டி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளிக் கூடத்தில் 2 ஆசிரியா்கள் மட்டுமே இருந்தனா். மாணவா்கள் இல்லாததால் பள்ளிக் கூடம் செயல்படவில்லை.