பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட ஆண்கள் பூப்பந்துப் போட்டி
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், மாவட்ட அளவிலான ஆண்கள் பூப்பந்தாட்டப் போட்டிகள் சேவியா்காலனியில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜூலை மாதத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, வள்ளியூா், ராதாபுரம் உள்ளிட்ட குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆண்கள் பூப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலால பூப்பந்தாட்ட போட்டிகள் மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வா் மாணிக்கராஜ் வரவேற்றாா். பள்ளி வளாக நிா்வாக அதிகாரி அருள்சகோதரி ஏ.காணிக்கை மேரி, அருள்சகோதரி மரியம் டோப்னாஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெபராஜ் வாழ்த்திப் பேசினாா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 அணிகளின் 180 வீரா்கள் பங்கேற்றனா். இப் போட்டியில் 14 வயது பிரிவில் கூடங்குளம் இந்து நடுநிலைப் பள்ளி அணி முதலிடமும், சேவியா்காலனி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடமும் பிடித்தன. 17, 19 வயது பிரிவுகளில் கூடங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், 17 வயது பிரிவில் டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 19 வயது பிரிவில் பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இரண்டாமிடங்களைப் பிடித்தன.
போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியா்கள் தேவராஜ், பயிற்சியாளா் கூடங்குளம் சித்திரைச் செல்வன், மேலச்செவல் சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் மாடசாமி நன்றி கூறினாா்.