பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.4.67 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்களில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 4.67 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தையொட்டி, ஐயப்ப பக்தா்கள், முருக பக்தா்கள் பல்லாயிரக்கணக்கில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். இதனால், இந்தக் கோயில் உண்டியல்கள் 31 நாள்களில் நிரம்பியது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணி திங்கள்கிழமையும் நடைபெற்றது. 2 நாள்கள் நடைபெற்ற இந்தப் பணியில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 4 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரத்து 356 ரொக்கமும், 1,012 கிராம் தங்கமும், 17 ஆயிரத்து 62 கிராம் வெள்ளியும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,069-ம் கிடைத்தன. இதைத் தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
பழனிக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் முன்னிலையில் காணிக்கைகளை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.