திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு: 116 சதுர கி.மீ. விரிவடையும் எல்லை
திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கப் பிரச்னை 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், 8 ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதன் மூலம், முடிவுக்கு வந்திருக்கிறது.
நகராட்சியாக இருந்த திண்டுக்கல், கடந்த 2014-ஆம் ஆண்டு மாநகராட்சி நிலை உயா்த்தப்பட்டது. இதையடுத்து, 48 வாா்டுகள் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய கடந்த 10 ஆண்டுகளாகத் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன்படி, திண்டுக்கல் சுற்றுப் புறங்களிலுள்ள பள்ளப்பட்டி, குரும்பபட்டி, பொன்னிமாந்துரை, பிள்ளையாா்நத்தம், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து ஆகிய 10 ஊராட்சிகளை இணைப்பதற்கான முன் மொழிவுகள் நகராட்சி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஊரக உள்ளாட்சியின் பதவிக் காலம் வருகிற 5-ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில், மீண்டும் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு முன், ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகளை நகராட்சி இயக்குநரகம் கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
இணைக்கப்படும் 8 ஊராட்சிகள்: இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் பட்டியலுக்கான அரசாணை நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையால் செவ்வாய்க்கிழமை (டிச.3) வெளியிடப்பட்டது.
இதன்படி, திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. ஏற்கெனவே, 10 ஊராட்சிகளை இணைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், பிள்ளையாா்நத்தம், பொன்னிமாந்துரை ஆகிய 2 ஊராட்சிகள் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அடியனூத்து, பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, முள்ளிப்பாடி, பள்ளப்பட்டி, சீலப்பாடி, தோட்டனூத்து ஆகிய 8 ஊராட்சிகள் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.
115.92 சதுர கி.மீ. விரிவடையும் மாநகராட்சி: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இணைக்கப்படும் 8 ஊராட்சிகளின் மக்கள் தொகை சுமாா் 1.16 லட்சமாக உள்ளது. 100.91 சதுர கி.மீ. அமைந்துள்ள இந்த ஊராட்சிகளை இணைக்கும்போது, திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 14.16 சதுர கி.மீ. இருந்து, 115.92 சதுர கி.மீ. விரிவடைகிறது.
இந்த 8 ஊராட்சிகளிலும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 23 முதல் 88 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், மக்கள் தொகை 31 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின் மூலம், கடந்த 10 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கப் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.
கொடைக்கானல் நகராட்சி விரிவாக்கம்:
இதேபோல, கொடைக்கானல் நகராட்சி எல்லையும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கொடைக்கானல் நகராட்சியுடன், வில்பட்டி ஊராட்சியின் 175.90 சதுர கி.மீ. பரப்பளவு இணைகிறது. கடந்த 201-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியின் மக்கள் தொகை 15,820.