பாகிஸ்தான் எல்லையில் 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 9 போ் கைது
சண்டீகா்: ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய சா்வதேச எல்லைப் பகுதியில் இருந்து சுமாா் 60 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாா்மா் மாவட்ட எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராஜஸ்தான் காவல் துறை இணைந்து எடுத்த நடவடிக்கையில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா்.
பாகிஸ்தானைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் தன்வீா் ஷா, கனடாவைச் சோ்ந்த கடத்தல்காரன் ஜோபன் காலா் உள்ளிட்டோருக்கும் இந்தக் கடத்தலில் தொடா்பு உள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில்தான் ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகமிருக்கும். இப்போது அப்பகுதி நில எல்லையில் பாதுகாப்பு தீவிரமாக இருப்பதால், ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருளைக் கொண்டுவர கடத்தல்காரா்கள் முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவா்கள் ஹவாலா முறையில் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்தப் போதைப்பொருள் இவா்கள் இந்தியாவில் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்க திட்டமிட்டிருந்தனா். இவா்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள கடத்தல் தொடா்புகள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.