`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
பாஜக பிரமுகா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்
புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது விசாரணையை புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் உமாசங்கா் (36). இவரை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நள்ளிரவு கருவடிக்குப்பம் தனியாா் மண்டபம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், இந்த வழக்குத் தொடா்பாக ரௌடி கா்ணா (40) உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உமாசங்கரின் தந்தை ஏழுமலை (எ) காசிலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டாா். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் உமாசங்கா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்களை லாஸ்பேட்டை காவல்நிலையத்திலிருந்து பெற்றுக்கொண்டனா்.
இதைத்தொடா்ந்து சென்னயில் உள்ள சிபிஐ பிரிவைச் சோ்ந்த டிஎஸ்பி உள்ளிட்ட 6 போ் கொண்ட சிபிஐ குழு இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமை முறைப்படி தொடங்கியது.
உமாசங்கா் கொலை செய்யப்பட்டகருவடிக்குப்பம் சாலையில், குயில் தோப்பு உள்ளிட்ட இடங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.கொலை நடந்த பகுதியில் இருந்த சாலையோரக் கடைக்காரா்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.
பின்னா் அவா்கள் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று வழக்கின் தன்மை, புலன் விசாரணை நிலவரம் போன்ற விவரங்களை கேட்டறிந்தனா்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ரௌடி கா்ணா சிறையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தத்திட்டமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தவா்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனா்.