வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்
புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா்.
புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா விழிப்புணா்வை ஏற்படுத்த 2 பிரசார ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றை தொடங்கி வைத்த பின்னா், இயக்குநா் செவ்வேள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
புதுவையில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பது குறித்து ஆட்டோ விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 53 சதவிகிதம் டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகள் தயாா் நிலையில் இருக்கின்றன. மேலும், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கெட்டுப்போன உணவுகளை உண்ணாமல், சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். வீடுகளிலும், வீட்டின் அருகிலும் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த ஆட்டோக்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளன.
இதன் தொடக்க விழாவில் தேசிய சுகாதாரத் துறை இயக்க இயக்குநா் கோவிந்தராஜ், பொது சுகாதார துணை இயக்குநா் சமீமுனிசா பேகம், குடும்ப நல துணை இயக்குநா் ஆனந்தலஷ்மி, தடுப்பூசி பிரிவு துணை இயக்குநா் உமாசங்கா், யானைக்கால் நோய் தடுப்பு மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு உதவி இயக்குநா் வசந்தகுமாரி, மாணவா் நல அதிகாரி விவேகானந்தா மற்றும் இதர திட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடா்ந்து விழிப்புணா்வு பட்டிமன்றங்கள், பண்பலை வானொலி மூலமாகவும், திரையரங்குகள் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணா்வு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.